
இந்திய அணியால் ஆஸ்திரேலியாவை மீண்டும் ஒருமுறை வீழ்த்த முடியவில்லை. நேற்று நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தயாசத்தில் படுதோல்வி அடைந்தது. பவுலிங், பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் இந்தியா சொதப்பியது.
புயல்வேகத்தில் பந்துவீசிய ஹில்பெனாஸ், பிரட் லீ, ஆஸ்திரேலிய அணிக்கு கைகொடுத்தனர். ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்திய அணியில் அஷ்வின் நீக்கப்பட்டு, ஜாகிர் கான் சேர்க்கப்பட்டார். இதையடுத்து நான்கு வேகங்களுடன் களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியில் மெக்கேவிற்கு பதிலாக பென் ஹில்பெனாஸ் இடம் பெற்றார். "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், "பேட்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்:
ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர், மாத்யூ வேட் இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். ஜாகிர் ஓவரில் வார்னர் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இந்த நேரத்தில் இர்பான் பதான், வார்னரை(43) வெளியேற்ற, நிம்மதி பிறந்தது. பாண்டிங்(7) மீண்டும் ஏமாற்றினார். வேட், பாரஸ்ட் மிகவும் மந்தமாக ஆட, 25வது ஓவரில் தான் ஆஸ்திரேலியாவால் 100 ரன்களை எட்ட முடிந்தது. வேட் 45 ரன்களில் வெளியேறினார்.
கிறிஸ்டியன் அதிரடி:
பின் மைக்கேல் ஹசி, பாரஸ்ட் சேர்ந்து ரன் விகிதத்தை உயர்த்தினர். உமேஷ் யாதவ், ரெய்னா ஓவரில் பவுண்டரிகளாக விளாசிய மைக்கேல் ஹசி(59), பதான் பந்தில் வீழ்ந்தார். இதே ஓவரில் பாரஸ்டும்(52) அவுட்டானார். கடைசி கட்டத்தில் டேவிட் ஹசி, கிறிஸ்டியன் அதிரடியாக ரன் சேர்த்து, போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்தினர். இவர்கள், வினய் குமாரை ஒருகை பார்த்தனர். இவரது பந்தை சிக்சருக்கு அனுப்பினார் டேவிட் ஹசி. தொடர்ந்து வினய் குமார் வீசிய போட்டியின் 49வது ஓவரில் கிறிஸ்டியன் வரிசையாக நான்கு பவுண்டரிகள் விளாச, ஸ்கோர் "ஜெட்' வேகத்தில் எகிறியது. கடைசி 10 ஓவரில் மட்டும் 101 ரன்கள் எடுக்கப்பட, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. டேவிட் ஹசி(26), கிறிஸ்டியன்(30) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் இர்பான் பதான் 3 விக்கெட் வீழ்த்தினார்.
விக்கெட் மடமட:
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி, ஹில்பெனாஸ், பிரட் லீ "வேகத்தில்' சிதறியது. "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏனோதானோ என விளையாடினர். பிரட் லீயிடம் முதலில் காம்பிர்(5) காலியானார். ஹில்பெனாஸ் மணிக்கு 145.6 கி.மீ., வேகத்தில் வீசிய பந்தில் சச்சின்(3) நடையை கட்டினார். பிரட் லீயின் அடுத்த ஓவரில் ரோகித் "டக்' அவுட்டானார். ஹில்பெனாஸ் வீசிய பந்தை விராத் கோஹ்லி அடிக்க, "ஸ்லிப்' திசையில் நின்ற டேவிட் ஹசி மிகவும் தாழ்வாக பிடித்தார். இது குறித்து சந்தேகம் வர, மூன்றாவது அம்பயரிடம் கேட்கப்பட்டது. முடிவில் "கேட்ச்' உறுதி செய்யப்பட, கோஹ்லி(12), வெளியேறினார். அப்போது இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
தோனி அரைசதம்:
பின் கேப்டன் தோனி, ரெய்னா இணைந்து சிறிது நேரம் போராடினர். கிறிஸ்டியன் "ஆப் ஸ்டம்புக்கு' வெளியே வீசிய பந்தை வீணாக அடித்த ரெய்னா(28) அவுட்டானார். ரவிந்திர ஜடேஜா(18) கைவிட்டார். தன்னுடன் வார்த்தை போரில் ஈடுபட்ட பிரட் லீ ஓவரில் அடுத்தடுத்து ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து, பதிலடி கொடுத்தார் தோனி. இவர் 56 ரன்களுக்கு ஹில்பெனாஸ் பந்தில் வீழ்ந்தார். இர்பான்(19), ஜாகிர்(9) தாக்குப்பிடிக்க தவற, இந்திய அணி 43.3 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலியா சார்பில் ஹில்பெனாஸ் 5, பிரட் லீ 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்திய அணியை 230 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதால், ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கான நான்கு புள்ளிகளுடன் சேர்த்து, கூடுதலாக ஒரு புள்ளியை "போனசாக' பெற்றது.
ஆட்ட நாயகன் விருதை ஹில்பெனாஸ் தட்டிச் சென்றார்.
மூன்றாவது அம்பயர் தேவையா
நேற்று 29வது ஓவரை வீசினார் ரெய்னா. 3வது பந்தில் மைக்கேல் ஹசியை மின்னல் வேகத்தில் "ஸ்டம்பிங்' செய்தார் தோனி. இது பற்றி சந்தேகம் எழ, மூன்றாவது அம்பயரான புருஸ் ஆக்சன்போர்டிடம் கேட்கப்பட்டது. "ரீப்ளே' பார்த்த போது, ஹசியின் கால், "கிரீசிக்கு' வெளியே இருப்பது போல் தெரிந்தது. மைதானத்தில் இருந்த மெகா "ஸ்கிரினில்' "அவுட்' என காண்பிக்கப்பட, ஹசி "பெவிலியன்' நோக்கி நடந்தார்.
இந்த நேரத்தில், களத்தில் இருந்த அம்பயர் பில்லி பவுடனை திடீரென தொடர்பு கொண்ட மூன்றாவது அம்பயர், "தவறுதலாக "அவுட்' பட்டனை அழுத்தி விட்டேன். உண்மையில் ஹசி "அவுட்' இல்லை' என, சொல்லி இருக்கிறார். உடனே ஹசியை திரும்ப அழைத்து வந்தார் பவுடன். அவரும் சிரித்துக் கொண்டே பேட்டிங்கை தொடர்ந்தார். ஆத்திரமடைந்த தோனி, அம்பயர் பவுடனிடம் தனது அதிருப்தியை தெரிவித்தார்.
ஒரு ரன்னில் வெளியேற இருந்த ஹசி, மூன்றாவது அம்பயர் தயவால் அரைசதம் கடந்தார். இது, இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இலங்கைக்கு எதிராக "டை' ஆன போட்டியில் 30வது ஓவரில் மலிங்கா 5 பந்துகள் மட்டுமே வீசினார். இதையும் அம்பயர்கள் கண்டுகொள்ளவில்லை. இது குறித்து தோனி கூறுகையில்,""களத்தில் இருக்கும் அம்பயர்கள் பணி கடினமானது. "ஏசி' அறையில் உட்கார்ந்து கொண்டு "ரீப்ளே' பார்க்கும் வசதி உள்ள மூன்றாவது அம்பயர் தவறு செய்யலாமா? கூடுதலாக ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டு சரியான பட்டனை அழுத்தி இருக்கலாமே,''என்றார்.
-----------
பீல்டிங்கில் சச்சின் மந்தம்
சச்சின் 100வது சத நெருக்கடியில் இருந்து இன்னும் மீளவில்லை. நேற்று 3 ரன்னில் "பெவிலியன்' திரும்பினார். "பீல்டிங்' செய்யும் போது, முழங்காலுக்கு கீழே பந்து தாக்கியதால் வலியால் அவதிப்பட்ட இவர், சிறிது நேரம் "பீல்டிங்' செய்ய வரவில்லை. "சீனியர்' வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாக இருப்பதால் தான் "டாப்-ஆர்டரில்' சுழற்சி முறை பின்பற்றப்படுவதாக தோனி தெரிவித்தார். இது குறித்து இவர் கூறுகையில்,""சச்சின், சேவக், காம்பிர் ஆகிய மூவரும் விளையாடினால், இந்திய அணியின் "பீல்டிங்' பாதிக்கப்படும். இவர்கள் மந்தமாக செயல்படுவதை எதிரணி வீரர்கள் பயன்படுத்திக் கொள்வர்,''என்றார்.
------------
தோனிக்கு மீண்டும் தடை
நேற்று நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இந்திய அணி பந்துவீசி முடிக்கவில்லை. 2 ஓவர்கள் தாமதமாக வீசியது. இதற்காக கேப்டன் என்ற முறையில் தோனிக்கு 40 சதவீத அபராதம் மற்றும் ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து வரும் 21ம் தேதி நடக்க உள்ள இலங்கைக்கு எதிரான போட்டியில் இவர் விளையாட முடியாது. மற்ற இந்திய வீரர்களுக்கு 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஐ.சி.சி., விதிமுறைப்படி 12 மாதத்தில் இரண்டு முறை தாமதமாக பந்துவீசினால் கேப்டனுக்கு தடை விதிக்கப்படும். இந்திய அணி ஏற்கனவே கடந்த 2011, ஏப்., 2ல் மும்பையில் நடந்த உலக கோப்பை பைனலில் இலங்கைக்கு எதிராக தாதமாக பந்துவீசியது.
இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் தாமதமாக பந்துவீசிய விவகாரத்தில் சிக்கிய தோனிக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அடிலெய்டில் நடந்த நான்காவது டெஸ்டில் அணியின் கேப்டன் பொறுப்பை சேவக் ஏற்றார்.
0 comments:
Post a Comment