
பயணி ஒருவர் தவறவிட்ட, ஒரு லட்சத்து 600 ரூபாய் பணப்பையை கண்டெடுத்த பஸ் டிரைவர், கண்டக்டர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், உரியவரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
சென்னை, பிராட்வேயில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மாநகர பஸ் தடம் எண், 557ல், நேற்று காலை, டிரைவர் சீட்டின் மறுபக்கம் உள்ள பயணியர் இருக்கையின் கீழ், கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது.கும்மிடிப்பூண்டி வந்ததும், பையில் பணம் இருப்பதைக் கண்ட டிரைவர் சங்கர், 29, கண்டக்டர் மோகன்குமார், 36, அதை, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் எஸ்.ஐ., ஞானசேகரனிடம் ஒப்படைத்தனர்.
பையில், ஒரு லட்சத்து, 600 ரூபாய் இருந்ததுடன், தனியார் லாரி டிரான்ஸ்போர்ட் ஒன்றின் ஆவணங்கள் இருந்தது. அதில் குறிப்பிட்டுள்ள, தொலைபேசி எண்ணில், போலீசார் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பஸ்சில் பயணம் செய்த மேற்கண்ட லாரி டிரான்ஸ்போர்ட் ஊழியர் பூபாலன், 54, என்பவர், தூக்கத்தில் பணத்தை தவறவிட்டது தெரிந்தது.
பூபாலனை நேரில் வரவழைத்த போலீசார், பஸ்சில் பணத்தை தவறவிட்டது அவர் தான் என்பதை உறுதி செய்தபின், கண்டக்டர், டிரைவர் முன்னிலையில் பணத்தை ஒப்படைத்தனர்.பஸ்சில் தவறவிட்ட, ஒரு லட்சத்து 600 ரூபாய் பணத்தை போலீசில் ஒப்படைத்த மாநகர பஸ் கண்டக்டர் மோகன்குமார், டிரைவர் சங்கர் ஆகியோரின் நேர்மையை, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., குமார் பாராட்டினர்.
0 comments:
Post a Comment