
ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணிமுத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது அணியாக இலங்கை பங்கேற்கிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் "உலக சாம்பியன்' இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்வியால் துவண்டு கிடந்த இந்திய அணிக்கு இளம் வீரர்கள் வரவு புத்துணர்ச்சியை தந்துள்ளது. தவிர, இரண்டாவது "டுவென்டி-20' போட்டியில் வென்றதும், இன்று இந்திய அணிக்கு மனதளவில் வலிமையை தந்துள்ளது. பேட்டிங்கில் காம்பிர் பார்முக்கு திரும்பியுள்ளார்.
சேவக் சற்று நிலைத்து விளையாட முயற்சித்தால் நல்லது. உலக கோப்பை தொடருக்குப் பின் சச்சின் மீண்டும், அணிக்கு திரும்பியுள்ளதால் காம்பிர் தனது இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டியது இருக்கும். இவரது 100வது சதம் அடிக்கும் முயற்சி இன்று நிறைவேறும் என்று நம்புவோம்.

ஜாகிர் வருகை:
டெஸ்ட் தொடரில் இந்திய அணி சார்பில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஜாகிர் கான் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால், பிரவீண் குமார் அல்லது வினய் குமார் என, இருவரில் ஒருவர் தான் இடம் பெற முடியும். சுழலில் தமிழகத்தின் அஷ்வின், ராகுல் சர்மா இருவரில் ஒருவருக்குத் தான் இடம்.
இதில் அஷ்வினுக்கு அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை இருவரும் களமிறங்கினால், வேறு வழியின்றி ரோகித் சர்மா பலியாடு ஆகலாம். 11 பேர் இடத்துக்கு இவ்வளவு போட்டி இருப்பதால், இர்பான் பதானுக்கு இப்போதைக்கு இடமில்லை எனத் தெரிகிறது.
பேட்டிங் வலிமை:
டெஸ்ட் தொடரில் மிரட்டிய ஆஸ்திரேலிய பேட்டிங் படை, முத்தரப்பு தொடரிலும் எழுச்சி பெறலாம். சிட்னி போட்டியில் மிரட்டிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வாடேயுடன், வார்னர் மீண்டும் அதிரடி துவக்கம் தரலாம். "மிடில் ஆர்டரில்' சீனியர்கள் பாண்டிங், மைக்கேல் ஹசி, கேப்டன் கிளார்க் கைகொடுப்பது உறுதி.
பின் வரிசையில் கிறிஸ்டியன், டேவிட் ஹசி, அறிமுக வீரர் பீட்டர் பாரஸ்ட் தொல்லை தர காத்திருக்கின்றனர். வேகப்பந்து வீச்சுக்கு சீனியர் பிரட் லீ தலைமை ஏற்கிறார். இவருக்கு மிட்சல் ஸ்டார்க், ஹாரிஸ் மற்றும் மெக்கேவும் உதவுவர். சுழலில் தோகர்டி இந்திய வீரர்களுக்கு சிக்கல் தருவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வெற்றி யாருக்கு:
கடைசியாக இரு அணிகள் பங்கேற்ற 10 ஒருநாள் போட்டிகளில், இந்தியா 6, ஆஸ்திரேலியா 4 போட்டிகளில் வென்றுள்ளன. இதனால் இரு அணிகளும் சமபலத்தில் உள்ளதால், போட்டியில் விறு விறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று நம்பலாம்.
பைனலுக்கு செல்வது எப்படி
முத்தரப்பு தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 4 லீக் போட்டிகளில் மோத வேண்டும். முடிவில், பட்டியலில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் பைனலுக்கு முன்னேறும். பைனல் மூன்று போட்டிகளை (மார்ச் 4, 6 மற்றும் 8) கொண்டதாக இருக்கும். இதில் இரு போட்டிகளில் வெல்லும் அணிக்கு கோப்பை கிடைக்கும். முதல் இரு போட்டியில் ஒரு அணியே வென்று விட்டால், மூன்றாவது போட்டி நடக்காது.
நம்பிக்கை உயர்ந்துள்ளது: ரெய்னா
இன்றைய போட்டி குறித்து இந்திய வீரர் ரெய்னா கூறுகையில்,"" இரண்டாவது "டுவென்டி-20' போட்டியில் வெற்றி பெற்றதால், எங்களது தன்னம்பிக்கை அதிகமாகி உள்ளது. சச்சின், ஜாகிர் கான் ஆகியோர் விளையாட இருப்பதும் வெற்றிக்கு உதவும்.
இம்மைதானத்தில் இதுவரை...
இன்று போட்டி நடக்கும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி பங்கேற்ற 16 போட்டியில் 8 வெற்றி, 8 தோல்வியை பெற்றது.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு விளையாடிய 11 போட்டியில், இந்திய அணி 5 (1980, 85, 86, 86, 2008) வெற்றி, 6 (1981, 86, 92, 2000, 04, 04) தோல்வியை பெற்றது.
* நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு (1981, 86) போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.
* பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு (1985, 85), வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒரு (1992) போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்...
ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக முத்தரப்பு ஒருநாள் தொடர் கடந்த 2008ல் நடந்தது. இதில் இந்திய அணி முதன் முறையாக கோப்பை வென்றது. அதன் பின் போதிய "ஸ்பான்ஷர்' இல்லாததால் தொடர் கைவிடப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இத்தொடர் நடத்தப்படுகிறது.
* இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள், இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன.
* 1999ல், இலங்கையில் இந்த மூன்று அணிகளும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடின. இதில் இலங்கை அணி கோப்பை வென்றது.
ஆஸி. அதிகபட்சம்
2004ல் இங்கு நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 48.3 ஓவரில் 288 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இம்மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* இப்போட்டியில் இந்திய அணி 49 ஓவரில் 270 ரன்களுக்கு "ஆல்-அவுட்டாகி' தோல்வி அடைந்தது. இது, இம்மைதானத்தில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர்.
ஸ்ரீகாந்த் முன்னிலை
மெல்போர்ன் மைதானத்தில், அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் முன்னிலை வகிக்கிறார். இவர், 40 போட்டியில் பங்கேற்று 7 சதம், 15 அரைசதம் உட்பட 2106 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியா சார்பில் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் முதலிடத்தில் உள்ளார். இவர், 9 போட்டியில் மூன்று அரைசதம் உட்பட 368 ரன்கள் எடுத்துள்ளார். இவரை தொடர்ந்து கவாஸ்கர் (288), வெங்சர்க்கார் (258) ஆகியோர் உள்ளனர்.
கலக்கல் கபில்
இம்மைதானத்தில், அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் முதலிடம் வகிக்கிறார். இவர், 28 போட்டியில் 46 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இந்தியா சார்பில் முன்னாள் கேப்டன் கபில் தேவ், 12 போட்டியில் 17 விக்கெட் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறார். இவரை அடுத்து, ரோஜர் பின்னி (9 போட்டி, 11 விக்கெட்) உள்ளார்.
நன்றி : தினமலர்
0 comments:
Post a Comment