
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மீண்டும் மோதுகின்றன. கடந்த இரு போட்டிகளில் தொடர்ந்து வென்ற இந்திய அணி "ஹாட்ரிக்' வெற்றி பெற காத்திருக்கிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. மொத்தம் 12 லீக் போட்டிகள் நடக்கும். இதுவரை நடந்துள்ள 4 லீக் போட்டிகளில் ஆஸ்திரேலியா (9 புள்ளி), இந்திய (8) அணிகள் முதல் இரு இடத்தில் உள்ளன. வெற்றி எதுவும் பெறாத இலங்கை அணி கடைசி இடத்தில் உள்ளது.
இன்று அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடக்கும் 5வது லீக் போட்டியில், இந்தியா, இலங்கை அணிகள் இரண்டாவது முறையாக மோதுகின்றன. முதல் மோதலில் இலங்கையை வென்ற இந்திய அணி, கடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது.

இந்திய அணிக்கு இன்றும் பேட்ஸ்மேன்கள் கைகொடுக்கலாம். "சீனியர்களுக்கு' சுழற்சி முறையில் ஓய்வு என்ற "பாலிசியின்' படி, இன்று சேவக் நீக்கப்படலாம். சச்சின் மீண்டும் களமிறங்கலாம். இவர், தனது 100வது சதத்தை எட்ட முயற்சிப்பார். இது நடந்தால், ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனின் சொந்த ஊரில் சாதித்த பெருமை கிடைக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 92 ரன்கள் விளாசிய காம்பிர், நல்ல துவக்கம் தரலாம்.
"மிடில் ஆர்டரில்' விராத் கோஹ்லி, ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோரில் ஒருவர் நிலைத்து நின்று விளையாடினால் நல்லது. கடைசி ஓவரில் சிக்சர் அடித்து வெற்றி தேடித்தந்த கேப்டன் தோனி, "ஆல் ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா இன்றும் வெற்றிக்கு முயற்சிக்கலாம்.
பிரவீண் வருவாரா:
, பவுலிங்கிலும் வீரர்களுக்கு ஓய்வு தரப்படுகிறது. கடந்த முறை பிரவீண் குமார் களமிறங்கவில்லை. ஒரு ஓவருக்கு சராசரியாக 5 ரன்கள் விட்டுத்தரும் வினய் குமாருக்குப் பதில், இவர் மீண்டும் களம் காண்பது உறுதி. ஜாகிர் கான் அனுபவத்தை பயன்படுத்த வேண்டும். சுழலில் வழக்கம் போல அஷ்வின் தொடர்கிறார். இதனால் ராகுல் இடம் கேள்விக்குறி தான்.
தில்ஷன் நம்பிக்கை:
இலங்கை அணிக்கு தில்ஷன், பேட்டிங்கில் நம்பிக்கை தந்தார். இன்று இவர் எழுச்சி காண முயற்சிக்கலாம். தரங்காவின் நிலை தொடர்ந்து பரிதாபம் தான். கேப்டன் ஜெயவர்தனா, சங்ககரா, சண்டிமால், திரிமான்னே ஆகியோர் அதிக ரன்சேர்க்க முயற்சிப்பர்.

பவுலிங்கை பொறுத்தவரை மலிங்கா, குலசேகரா மட்டும் ஆறுதல் தந்தனர். ஆல் ரவுண்டர்கள் பெரேரா, மாத்யூஸ் ஆகியோரும் அசத்துகின்றனர். கடந்த முறை இந்திய அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கிய இவர்கள், இன்றும் அதைத் தொடரலாம்.
"பீங்டிங்' உறுதி:
அடிலெய்டு ஆடுகளம், இரண்டாவதாக களமிறங்கும் அணியின் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது. இதனால் இன்று "டாஸ்' வெல்லும் அணியின் கேப்டன், கண்ணைக்கட்டிக் கொண்டு பீல்டிங் தேர்வு செய்யத் தயங்கமாட்டார்.
ராசியான அடிலெய்டு
அடிலெய்டில் இந்திய அணி இதுவரை 12 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் 7 ல் இந்திய அணி வென்றது. 5 ல் தோற்றுள்ளது.
* இந்தியா, இலங்கை அணிகள் இங்கு மோதிய ஒரு போட்டியில் (2008) இந்திய அணி வென்றது.
* கடைசியாக இந்திய அணி இங்கு விளையாடிய 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ளது.
மழை வருமா
அடிலெய்டில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். வெப்பநிலை அதிகபட்சம் 34, குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியசாக இருக்கும். மழை வர வாய்ப்பு இல்லை.
தோனி "200'
கேப்டன் தோனி இன்று 200வது ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறார். இம்மைல்கல்லை எட்டும் முதல் இந்திய விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என்ற பெருமை பெறுகிறார். இதற்கு முன் நயன் மோங்கியா 140 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றிருந்தார்.
கடந்த 2004ல் வங்கதேசத்துக்கு எதிரான சிட்டகாங் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் தோனி. விசாகப்பட்டினத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில்(2004-05) 123 பந்தில் 148 ரன்கள் விளாசிய இவர், தன்னை மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக அடையாளம் காட்டினார். இது தான் இவரது முதல் சதம். அணியின் கேப்டன் அந்தஸ்துக்கு விரைவில் உயர்ந்த இவர், 2007ல் "டுவென்டி-20' உலக கோப்பை பெற்று தந்தார்.
2011ல் 50 ஓவர் உலக கோப்பையை வென்று காட்டினார். தோனியின் சில சாதனைகள்...
2005ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 299 ரன்கள் என்ற இலக்கை துரத்திய போது, 145 பந்துகளில் 183 ரன்கள் குவித்து வெற்றிபெறச் செய்தார். இப்போட்டியில் 50 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்த இவர், பேட்டிங்கில் 46 ஓவர்கள் வரை களத்தில் இருந்தார். தவிர, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது தான்.
* 2011 உலக கோப்பை பைனலில் இலங்கை நிர்ணயித்த 275 ரன்களை துரத்திய இந்திய அணி 114 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பின் 91 ரன்கள் எடுத்த தோனி, கடைசியில் சிக்சர் அடித்து கோப்பை வென்று தந்தார்.
* ஐ.பி.எல்., சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரு முறை கோப்பை(2010, 2011) வென்று தந்தார். இதே போல 2011ல் நடந்த சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் சென்னை அணிக்கு கோப்பை பெற்று தந்தார்.
0 comments:
Post a Comment