Pages

Subscribe:

Ads 468x60px

Friday, 16 March 2012

உலக சாம்பியனுக்கு "உதை''

Sachin Tendulkar holds up his India helmet after reaching his century  

ஆசிய கோப்பை லீக் போட்டியில், "உலக சாம்பியன்' இந்திய அணி, வங்கதேசத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சச்சினின் 100வது சதம் வீணானது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் என, நான்கு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மிர்புரில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன.
 லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. "டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர், "பீல்டிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் வினய் குமார் நீக்கப்பட்டு டின்டா சேர்க்கப்பட்டார்.


காம்பிர் அதிர்ச்சி:
இந்திய அணிக்கு சச்சின், காம்பிர் ஜோடி துவக்கம் கொடுத்தது. கடந்த போட்டியில் சதம் அடித்த காம்பிர், இம்முறை 6 ரன்னுக்கு "போல்டாகி' அதிர்ச்சி தந்தார். பின் ஹொசைன் பந்தில் பவுண்டரி அடித்த சச்சின், சாகிப் அல் ஹசன் ஓவர்களில் சிக்சர், பவுண்டரி விளாசினார்.


கோஹ்லி அரைசதம்:
கடந்த இரு போட்டிகளில் சதம் அடித்து இருந்த விராத் கோஹ்லி, நேற்றும் தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார். இவர் சர்வதேச அளவில் தனது 21வது அரைசதத்தை எட்டினார். துவக்கத்தில் வேகம் காட்டிய சச்சின், போகப் போக நிதானத்துக்கு மாற, "ரன்ரேட்' குறைந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்த நிலையில், விராத் கோஹ்லி (66) அவுட்டாகினார்.


சச்சின் சதம்:
அடுத்து வந்த ரெய்னா, அதிரடியாக ரன்கள் சேர்க்க, அவ்வப்போது வந்த பவுண்டரிகளால், ஸ்கோர் சற்று வேகமாக உயர்ந்தது. மறுமுனையில் 100வது சதம் அடிக்கும் முயற்சியில் இருந்த சச்சின், ஒவ்வொரு ரன்களாக சேர்த்து இலக்கை நெருங்கினார்.
சாகிப் அல் ஹசன் பந்தை சந்தித்த சச்சின், "ஸ்கொயர் லெக்' திசையில் பந்தை தட்டிவிட்டு, வரலாற்று சிறப்பு மிக்க ரன்னை எடுத்து, சர்வதேச அரங்கில் 100வது சதத்தை எட்டி அசத்தினார். வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், சச்சின் எடுத்த முதல் சதம் இதுதான்.


அடுத்தடுத்து "அவுட்':
இந்த உற்சாகத்தில் ஹொசைனின் அடுத்த ஓவரில், அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசினார் சச்சின். இதே ஓவரில் சிக்சர் விளாசிய ரெய்னா, தனது 21வது அரைசதம் அடித்தார். இவர் 51 ரன்னில் திரும்பினார். அடுத்த பந்தில் சச்சினும் (114 ரன்கள், 147 பந்து) அவுட்டாகினார். ரோகித் சர்மா (4) நீடிக்கவில்லை.
கடைசிநேரத்தில் தோனி கைகொடுக்க, இந்திய அணி 50 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்தது. தோனி (21), ஜடேஜா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.


தமிம் அபாரம்:
கடின இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு நஜிமுதீன் (5) துவக்கத்திலேயே அவுட்டாக்கி அதிர்ச்சி தந்தார். தமிம் இக்பாலுடன், ஜகுருல் இஸ்லாம் இணைந்தார். இந்த ஜோடி இந்திய வீரர்களின் பவுலிங்கை எளிதாக சந்திக்க, ஓவருக்கு ஒரு பவுண்டரி என சீராக கிடைத்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிம் இக்பால், தனது பங்கிற்கு 21வது அரைசதம் அடிக்க, மறுமுனையில் இஸ்லாம் தனது முதல் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த நிலையில், இஸ்லாம் (53) ஜடேஜா சுழலில் வீழ்ந்தார்.


சாகிப் அதிரடி:
சிறிது நேரத்தில் தமிம் இக்பால் (70) அவுட்டானார். டின்டா வீசிய 37வது ஓவரில், சாகிப் அல் ஹசன் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச, 18 ரன்கள் எடுக்கப்பட்டது. அஷ்வின் பந்தில் சிக்சர் அடித்த சாகிப், இர்பான் ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்தார். இவர் 49 ரன்களில் "ஸ்டம்டு' ஆக, லேசான தடுமாற்றம் ஏற்பட்டது.


மறுமுனையில் நாசிர் ஹொசைன், 3வது அரைசதம் அடிக்க, இர்பான் ஓவரில் அடுத்தடுத்து சிக்சர் அடித்த, முஷ்பிகுர் ஆட்டத்தை தன்வசப்படுத்தினார். தொடர்ந்து மிரட்டிய இவர், பிரவீண் குமார் ஓவரில் பவுண்டரி, சிக்சர் என அடுத்தடுத்து விளாசினார். நாசிர் ஹொசைன் 54 ரன்கள் எடுத்தார்.
வங்கதேச அணி 49.2 ஓவரில் 293 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முஷ்பிகுர் (46), மகமதுல்லா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஒருநாள் அரங்கில் உலக சாம்பியனான இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
நாளை நடக்கவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய அணி கட்டாயம் வென்றால் மட்டுமே, பைனலுக்கு செல்ல முடியும்.
 

முதல் "2000'
சர்வதேச அளவில் 2000 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் இந்திய வீரர் சச்சின். இதுவரை 462 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 49 சதங்கள் உட்பட 18,374 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 8044 ரன்கள் பவுண்டரி (2011) மூலம் வந்தவை. இவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் ஜெயசூர்யா (1500 பவுண்டரி) உள்ளார்.


டெஸ்ட் அரங்கில் "டாப்'
சர்வதேச டெஸ்ட் அரங்கில் சச்சின் இதுவரை 188 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, 51 சதங்கள் உட்பட மொத்தம் 15,470 ரன்கள் எடுத்துள்ளார். இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள் விவரம்:
வீரர்/அணி    போட்டி    ரன்கள்    சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா)    188    15,470    51/65
டிராவிட் (இந்தியா)    164    13,288    36/63
பாண்டிங் (ஆஸி.,)    162    13,200    41/61


ஒருநாள் முதல்வன்
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் இதுவரை 49 சதங்கள் உட்பட 18,374 ரன்கள் எடுத்துள்ளார். இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள் விவரம்:
வீரர்/அணி    போட்டி    ரன்கள்    சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா)    462    18,374    49/95
பாண்டிங் (ஆஸி.,)    375    13,704    30/82
ஜெயசூர்யா (இலங்கை)    445    13,430    28/68


இன்னும் எட்ட வேண்டியவை
டெஸ்ட், ஒருநாள் அரங்கில் மொத்தம் 100 சதம் அடித்துள்ள சச்சின், ஒருநாள் போட்டிகளில் இதுவரை 95 அரைசதம் அடித்துள்ளார். இன்னும் 5 அரைசதம் அடித்து அரைசதத்தில் "100' என்ற இலக்கை எட்ட வேண்டும்.
* ஒரு நாள் அரங்கில் 49 சதம் அடித்துள்ள இவர், 50வது சதம் அடிக்க விரும்பலாம். இந்த இலக்குகளை எட்டி விட்டு தான் ஓய்வு பெறுவாரா...


அஷ்வின் "50'
நேற்று சாகிப் அல் ஹசனை அவுட்டாக்கிய அஷ்வின், மிகவேகமாக 50 விக்கெட் (34 போட்டி) வீழ்த்திய, முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் ஹர்பஜன் சிங், 40 போட்டிகளில் இந்த இலக்கை எட்டியுள்ளார்.
--
சச்சின் மந்தமான ஆட்டம்
நேற்று சச்சின், 100வது சதம் அடிப்பதை மனதில் கொண்டு, டெஸ்ட் போட்டியை போல, மந்தமாக விளையாட, ஸ்கோர் வேகம் குறைந்தது.
147 பந்துகளில் 114 ரன்கள் எடுத்த இவரது "ஸ்டிரைக் ரேட்' 77.55. ஆனால் வங்கதேசத்தின் நாசிர் (93.10), சாகிப் (158.06), முஷ்பிகுர் (184) ஆகியோர் குறைந்த பந்துகளில் ரன்கள் எடுத்து இந்தியாவை வீழ்த்தினர்.
கடந்த 2007 உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்தியாவை வென்ற வங்கதேச அணி, நேற்று மீண்டும் சாதித்தது.
---
"வில்லன்' இர்பான்
 வங்கதேச அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 33 ரன்கள் தேவைப்பட்டன. இந்நிலையில் பவுலிங் செய்த இர்பான் பதான், அடுத்தடுத்து இரு சிக்சர் விட்டுக் கொடுக்க, போட்டியின் முடிவு தலைகீழானது. இந்திய ரசிகர்களின் வில்லனாக மாறினார் இர்பான்.


இந்தியாவில் கிரிக்கெட் மதம் என்றால், அதன் கடவுளாக சச்சின் திகழ்கிறார். ரசிகர்களின் நெஞ்சம் கவர்ந்த இவர், எண்ணற்ற சாதனைகள் படைத்தார். நேற்று 100வது சர்வதேச சதம் கண்ட உலகின் முதலாவது வீரர் என்ற வரலாறு படைத்தார் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின்.

தனது 16 வயதில் இந்திய அணியில் காலடி எடுத்து வைத்த இவர், ரன் மழை பொழிந்தார். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன், அதிக சதம் எடுத்து சாதித்தார். இங்கிலாந்துக்கு எதிராக 1990ல் முதல் சதம் அடித்தார். ஒட்டுமொத்தமாக 99 சர்வதேச சதங்கள் அடித்தார். 100வது சதம் அடிக்க மட்டும் நீண்ட காலம் காத்திருந்தார். 33 இன்னிங்சிற்கு பிறகு நேற்று வங்கதேசத்துக்கு எதிராக சதத்தில் சதம் கண்டார்.
-----------------
50 கி.கி., எடை குறைந்தேன்
சதத்தில் சதம் கண்ட மகிழ்ச்சியில் சச்சின் கூறியது:
எத்தனை சதங்கள் அடிக்கிறோம் என்பது முக்கியமல்ல. அணியின் நலனே முக்கியம். 100வது சதம், எனக்கு மனதளவில் நெருக்கடியை கொடுத்தது. இதன் காரணமாக 50 கி.கி., எடை குறைந்து விட்டதாக உணர்ந்தேன்
நான் 99வது சதம் அடித்த போது, யாருமே கண்டுகொள்ளவில்லை. உண்மையில் 100வது சதம் என்ற மைல்கல்லை பற்றி நினைக்கவே இல்லை. ஆனால், "மீடியா' தான் எல்லாவற்றையும் கிளப்பி விட்டது. நான் எங்கு சென்றாலும் இதைப்பற்றி தான் கேட்டார்கள். அனைவரும் 100வது சதத்தை பற்றி தான் பேசினார்கள். இதனால் மனதளவில் கடினமாக உணர்ந்தேன்.
நேற்று மந்தமாக "பேட்' செய்ததற்கு ஆடுகளம் தான் காரணம். பந்து பேட்டை நோக்கி விரைவாக வரவில்லை. 


"கிரிக்கெட்டை ரசித்து ஆடுங்கள்; உங்கள் கனவுகளை விரட்டுங்கள்' என்பதை தான் இளம் வீரர்களுக்கு அறிவுரையாக சொல்ல விரும்புகிறேன். உலக கோப்பை வெல்ல நான் 22 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. எனவே, கனவுகள் ஒருநாள் கண்டிப்பாக நனவாகும்.
இவ்வாறு சச்சின் கூறினார்.



வாழ்த்து மழையில்...
சதத்தில் சதம் கண்ட சச்சினுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


மன்மோகன் சிங்(பிரதமர்):  நூறாவது சதம் அடித்து வரலாறு படைத்த சச்சினுக்கு நாட்டு மக்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்து சொல்கிறேன். இவர், இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரது நீண்ட கிரிக்கெட் வாழ்க்கை வெற்றியும், துணிச்சலும் நிறைந்தது. இளம் தலைமுறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இன்னும் நிறைய சாதøனைகள் படைக்கட்டும்.


வெங்சர்க்கார்(முன்னாள் இந்திய கேப்டன்): சச்சினுக்கு மட்டுமல்ல இந்திய கிரிக்கெட்டுக்கே தங்கமான தருணம். 100 சதம் என்ற மகத்தான சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம். இந்த சாதனையை ஒரு இந்தியர் நிகழ்த்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


சந்து போர்டே(முன்னாள் இந்திய கேப்டன்): மகத்தான வீரரால் மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு இல்லை. இது நிரந்தர சாதனையாகவே நிலைத்திருக்கும்.


மொகிந்தர் அமர்நாத்(முன்னாள் இந்திய வீரர்): சச்சினை போன்ற சாதனை வீரர் கிடைக்க, இந்திய அணி கொடுத்து வைத்திருக்க வேண்டும். இவரது அர்ப்பணிப்பு உணர்வு மகத்தானது. சர்வதேச அளவில் 23 ஆண்டுகள் விளையாடுவது எளிதான காரியமல்ல. இந்திய கிரிக்கெட்டுக்கு நேற்று மிகவும் "
ஸ்பெஷலான' நாள்.
கவாஸ்கர்(முன்னாள் இந்திய கேப்டன்): சச்சின் எப்போதுமே ரன் எடுக்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பார். இவரது ரன் தாகம் ஒருபோதும் குறைந்தது கிடையாது. இவரது 100வது சதம் அடித்த தருணத்தை கொண்டாடி மகிழ்வோம்.

ஸ்ரீகாந்த்(இந்திய தேர்வுக்குழு தலைவர்): 100வது சதம் அடிக்க சச்சின் நீண்ட காலம் எடுத்துக் கொண்டார் என விமர்சிக்கின்றனர். எதையும் எளிதாக சொல்லி விடலாம். ஆனால், களத்தில் இறங்கி 23 ஆண்டுகளுக்கும் மேல் விளையாடினால் தான், அதன் கஷ்டத்தை உணர்ந்து கொள்ள முடியும். தற்போதைய தருணம் மிகவும் மகிழ்ச்சியானது.







Post Comment

0 comments:

Post a Comment