
அடிலெய்டு டெஸ்டில் நடந்த நான்காவது டெஸ்டிலும் இந்திய அணி "அடி வாங்கியது. இப்போட்டியில் 298 ரன் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. இத்தொடர் முழுவதும் அனைத்து பிரிவுகளிலும் சொதப்பிய இந்திய அணி, டெஸ்ட் தொடரை 0-4 என, முழுமையாக இழந்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகளில் வரிசையாக தோற்ற இந்திய அணி, தொடரை ஏற்கனவே இழந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட், அடிலெய்டில் நடந்தது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 604, இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து "டிக்ளேர் செய்தது. இந்திய அணி 272 ரன்கள் எடுத்தது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில், 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்திருந்தது.

எல்லாம் முடிந்தது:
நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இஷாந்த் சர்மா (2), சகா (3) இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் "சரண் அடைந்தனர். ஜாகிர் கான், அஷ்வின் இருவரும் சற்று போராடியதால், இந்திய அணியின் ஸ்கோர் 200 ஐ தாண்டியது.
ஜாகிர் கான் 15 ரன்னில் அவுட்டானார். உமேஷ் யாதவ் தன் பங்கிற்கு 1 ரன்னுக்கு வெளியேற, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில், 201 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 298 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. அஷ்வின் (15) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் லியான் 4, ஹாரிஸ் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-4 என்ற கணக்கில் முழுமையாக இழந்தது. ஆட்டநாயகன் விருதை சிடில் பெற்றார்.
தொடர் நாயகன்:
இத்தொடரில் தலா ஒரு "டிரிபிள் சதம், இரட்டை சதம் அடித்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் கிளார்க், 626 ரன்கள் குவித்து முதலிடத்தை பிடித்தார். இவர் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். பவுலிங்கில் ஆஸ்திரேலிய வீரர் ஹில்பெனாஸ், 27 விக்கெட் கைப்பற்றி முதலிடத்தை பெற்றார்.
எட்டாவது தோல்வி
அன்னிய மண்ணில் இந்திய அணியின் டெஸ்ட் தோல்விக்கு, இன்னும் முடிவு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு இங்கிலாந்து (0-4), தற்போது ஆஸ்திரேலியா )0-4 என, தொடர்ந்து 8 தோல்வியடைந்துள்ளது. இதில் நான்கு போட்டிகளில், இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
மைதானம் மாதம்/ஆண்டு தோல்வி வித்தியாசம்
லார்ட்ஸ் ஜூலை/2011 196 ரன்கள்
நாட்டிங்காம் ஜூலை/ஆக.,/2011 319 ரன்கள்
பர்மிங்காம் ஆக.,/2011 இன்னிங்ஸ், 242 ரன்கள்
ஓவல் ஆக.,/2011 இன்னிங்ஸ், 8 ரன்கள்
மெல்போர்ன் டிச.,/2011 122 ரன்கள்
சிட்னி ஜன.,/2012 இன்னிங்ஸ், 68 ரன்கள்
பெர்த் ஜன.,/2012 இன்னிங்ஸ், 37 ரன்கள்
அடிலெய்டு ஜன.,/2012 298 ரன்கள்
---
மூன்றாவது இடம்
தொடர் தோல்வியால், இத்தொடரின் துவக்கத்தில் 118 புள்ளியுடன் இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி, 7 புள்ளிகளை இழந்து, டெஸ்ட் தரவரிசையில் மூன்றாவது (111.10 புள்ளி) இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி நான்காவது (110.80) இடத்தில் உள்ளது. இங்கிலாந்து (125), தென் ஆப்ரிக்கா (117) முதல் இரு இடத்திலுள்ளன.
2010, டிச. 16ல் 129 புள்ளியுடன் முதலிடத்தில் இருந்த இந்திய அணி, அடுத்தடுத்த தோல்விகளால் 18 புள்ளிகளை இழந்துள்ளது.
---
டிராவிட் ஓய்வு இல்லை
ஆ ஸ்திரேலிய தொடரில் 4 போட்டிகளில் 194 ரன்கள் மட்டுமே எடுத்த டிராவிட், ஓய்வு பெறுகிறார் என செய்திகள் வெளியாகின. இதை மறுத்து மீடியா மானேஜர் ஜி.எஸ்.அலுவாலியா கூறுகையில், ""தற்போதைய நிலையில் சீனியர் வீரர்கள் யாரும் உடனடியாக ஓய்வு பெரும் திட்டமில்லை. இதில் உண்மையில்லை, என்றார்.

0 comments:
Post a Comment