
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பைனலில், இந்தியாவின் பயஸ்,39, செக் குடியரசின் ஸ்டெபானெக்,33, ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் இப்பிரிவில் கோப்பை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பயஸ்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், மெல்போர்ன் நகரில் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் பயஸ், செக் குடியரசின் ஸ்டெபானெக் ஜோடி முன்னேறி இருந்தது. இதற்கு முன் மூன்று முறை பைனலுக்கு முன்னேறியும், ஒரு முறை கோப்பை பயஸ் ஜோடி வென்றதில்லை. இதில் இரு முறை (2006, 2011) அமெரிக்காவின் பாப், மைக் பிரையன் சகோதரர்களிடம் தோற்றது.
நேற்று நடந்த பைனலில் பயஸ் ஜோடி, மீண்டும் "நம்பர்-1' ஜோடியான பாப், மைக் பிரையன் சகோதரர்களை சந்தித்தது. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்போட்டியின் முதல் செட்டில், இரு ஜோடிகளும் மாறி மாறி "கேம்களை' எடுக்க, முடிவு "டை பிரேக்கருக்கு' சென்றது. அபாரமாக செயல்பட்ட பயஸ் ஜோடி, 7-6 என முதல் செட்டை வென்றது.
இரண்டாவது செட்டில் பயஸ் ஜோடி தொடர்ந்து அசத்தியது. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பயஸ் ஜோடி, 6-2 என எளிதாக செட்டை கைப்பற்றியது. 1 மணி நேரம், 24 நிமிடங்கள் நடந்த போராட்டத்தின் முடிவில் 7-6, 6-2 நேர் செட் கணக்கில் வென்ற பயஸ்-ஸ்டெபானெக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
முதல் இந்தியர்: ஆஸ்திரேலிய ஓபன் வரலாற்றில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் யாரும் பட்டம் வென்றதில்லை. முதன் முறையாக கோப்பை வென்ற இந்தியர் என்ற பெருமை படைத்துள்ளார் பயஸ்.
13வது கோப்பை: பயஸ், இதுவரை ஆண்கள், கலப்பு இரட்டையரில் தலா 6 வீதம் மொத்தம் 12 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றிருந்தார். இந்த ஆண்டு துவக்கத்தில் சக வீரர் பூபதியை பிரிந்த இவர், ஸ்டெபானெக்குடன் சேர்ந்து, முதன் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில், கோப்பை வென்று அசத்தியுள்ளார்.
இன்றைய கலப்பு இரட்டையர் பைனலில், ரஷ்யாவின் வெஸ்னினாவுடன் இணைந்து பயஸ் கோப்பை வெல்லும் பட்சத்தில், ஒரே ஆண்டில் ஒரே கிராண்ட்ஸ்லாம் தொடர் ஆண்கள், கலப்பு இரட்டையர் பிரிவில் கோப்பை வென்ற வீரர் என்ற சாதனை படைக்கலாம்.
----
கோப்பை வென்றார் அசரன்கா
----
கோப்பை வென்றார் அசரன்கா
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பைனலில், தரவரிசையில் மூன்றாவது இடத்திலுள்ள பெலாரசின் அசரென்கா, "நம்பர்-4' வீராங்கனை ரஷ்யாவின் ஷரபோவாவை சந்தித்தார். முதல் செட்டை 6-3 என, கைப்பற்றிய அசரென்கா, இரண்டாவது செட்டை, 6-0 என எளிதாக தனதாக்கினார். முடிவில் 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற அசரென்கா, கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
தவிர, பெலாரசை சேர்ந்த ஒருவர் பெறும், முதல் பட்டமும் இது தான். இவ்வெற்றியின் மூலம் நாளை வெளியாகும் சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறுகிறார்.
0 comments:
Post a Comment